விண்டோஸ் இயக்கம் நாம் எதிர்பாராத நேரங்களில்,
தொடர்ந்து இயங்க முடியாமல், முடங்கிப் போகும் வாய்ப்புகள் சில வேளைகளில்
ஏற்படுவதுண்டு. இதற்குக் காரணம் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனப் பொதுவாகக்
குற்றம் சாட்ட முடியாது. வேறு பல காரணங்களாலும் இது ஏற்படலாம். அவற்றில் சிலவற்றை
இங்கு காணலாம்.
1.மெமரி மதர்போர்ட்
பிரச்னை:கம்ப்யூட்டர் முடங்கிப் போய், நீல வண்ணத்தில் திரை
மாறுவதற்கான காரணங்களில், முதன்மையாக இருப்பது, மெமரி அல்லது மதர்போர்டில் ஏற்படும்
பிரச்னைகளே. இதனை Fatal Exception Error என அழைக்கின்றனர். மெமரியில் ஸ்டோர்
செய்யப்பட்ட டேட்டாவினை, மீண்டும் பெற முடியாத பிரச்னையே இது.
2.பயாஸ் செட்டிங்ஸ்:பொதுவாக
மதர்போர்டுகள் தயாரிக்கப்படும் இடத்திலேயே, அனைத்து வகை டிஜிட்டல் இயக்கத்திற்கும்,
இணைப்பிற்கும் தயாராக இருக்கும் வகையிலேயே வடிவமைக்கப் படுகின்றன. பெர்சனல்
கம்ப்யூட்டரில் அவை இணைக்கப் படுகையில், கம்ப்யூட்டர் தயாரிப்பவரால், மாற்றங்கள்
மேற்கொள்ளப்படுகின்றன. பின் தனிநபராகிய பயனாளரால், அவருக்கான பயாஸ் மெமரியில் இவை
பதிவு செய்யப்பட்டு அமைக்கப்படுகின்றன. பயாஸ் மெமரியில் பதிவு செய்யப்பட்டவை,
அதற்கு மின் சக்தி வழங்கும் சீமாஸ் பேட்டரியின் மூலம் தொடர்ந்து இயக்கத்தில்
இருக்கும். இந்த பேட்டரி தன் சக்தியை இழக்கும் போது, பயாஸ் தன் பழைய, பேக்டரி
செட்டிங்ஸ் நிலைக்குத் திரும்புகிறது. அப்போது, கம்ப்யூட்டரை வடிவமைத்தவர் மற்றும்
பயனாளர் அமைத்த செட்டிங்ஸ் இல்லாமல், கம்ப்யூட்டர் மதர்போர்டுக்கும், இணைக்கப்
பட்டுள்ள சாதனங்களுக்கும் இடையே இயக்க பிரச்னை ஏற்படுகிறது. மேலும் கம்ப்யூட்டர்
இயங்கத் தொடங்குகையில், முதலில் சிடி அல்லது யு.எஸ்.பி. ட்ரைவில் ஆப்பரேட்டிங்
சிஸ்டத்தைத் தேடி இயங்கட்டும் என செட்டிங்ஸ் அமைத்து, அவற்றில் சிஸ்டம் இல்லை
என்றாலும், கம்ப்யூட்டர் பூட் செய்வதில் பிரச்னை ஏற்படும்.
3.விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி:கம்ப்யூட்டர்
இயக்கம் முழுமைக்குமான குறியீட்டு வரிகள் எழுதப்பட்டுள்ள தொகுப்பே விண்டோஸ்
ரெஜிஸ்ட்ரி. இப்போது இயங்கும் கம்ப்யூட்டர்களில், ரெஜிஸ்ட்ரி தொகுப்பில் முன்பு போல
பிரச்னை ஏற்படுவதில்லை. இருப்பினும், இதன் குறியீட்டு வரிகளில் சிக்கல் ஏற்பட்டால்,
விண்டோஸ் இயக்கம் தொடங்குவதிலும், தொடர்ந்து இயங்குவதிலும் பிரச்னை ஏற்படும்.
இவ்வாறு பிரச்னைகள் ஏற்பட்டால், சரி செய்வதற்கென பல சாப்ட்வேர் தொகுப்புகள்
கிடைக்கின்றன. இவை
Registry Fix Software என
அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஒன்றைப் பயன்படுத்தலாம். விண்டோஸ் சரியாக இயங்கவில்லை
எனில், அதனைப் பாதுகாப்பான வழியான சேப் மோடில் (
Safe Mode) இயக்கி, அதிலிருந்தே
புரோகிராம்களை இயக்கிப் பார்க்கலாம்.
4.மாறிப்
போன ட்ரைவர்கள்:ஹார்ட்வேர் சாதனங்கள் எப்படி செயல்பட வேண்டும்
என கட்டளை கொடுப்பவை ட்ரைவர் புரோகிராம்களாகும். அவை சரியாக இயங்கவில்லை என்றால்,
நிச்சயம் விண்டோஸ் இயக்கம் முடங்கிப் போகும் வாய்ப்புகள் அதிகம். இது போன்ற
நிகழ்வுகள் ஏற்படுகையில், நமக்கு ஒரு எர்ரர் மெசேஜ் (Error Message) கிடைக்கும்.
இந்த பிழைச் செய்தியில் எங்கு பிரச்னை உள்ளது எனக் காட்டப்படும். இது புரியவில்லை
என்றால், அதனை அப்படியே காப்பி செய்து, கூகுள் தேடல் தளத்தில் ஒட்டி தேடினால், அந்த
பிரச்னை குறித்த விளக்கமும், அதனைத் தீர்க்க என்ன செய்திட வேண்டும் என்ற
வழிகாட்டலும் கிடைக்கும். அதனைப் பின்பற்றலாம். பிரச்னை தொடர்ந்து ஏற்பட்டால்,
குறிப்பிட்ட ட்ரைவர் புரோகிராமினை, சிஸ்டத்திலிருந்து நீக்கி, மீண்டும் அதன்
மேம்படுத்தப்பட்ட ட்ரைவர் புரோகிராமினைப் பதிவது சரியான தீர்வாகும்.
5. ஹார்ட் ட்ரைவ் தரும் பிரச்னை:ஹார்ட்
ட்ரைவ்களில் ஏற்படும் பழுதுகளால், விண்டோஸ் முடங்கிப் போவது அடிக்கடி நடக்கும்
நிகழ்வாகும். பயாஸ் புரோகிராம் சரியாக வடிவமைக்கப்பட்டு, உங்கள் கம்ப்யூட்டர்,
ஹார்ட் ட்ரைவில் பூட் செய்யக்கூடிய பகுதியைத் தேடி அறிய முடியவில்லை எனில்,
இதற்குக் காரணம் ஹார்ட் ட்ரைவாகத்தான் இருக்க முடியும். பொதுவாக, இவற்றில்
பதிந்துள்ள பைல் ஒன்றைத் திறக்க முயற்சிக்கும் போதுதான், ஹார்ட் ட்ரைவில் பிரச்னை
இருப்பது தெரியவரும். இலவசமாக ஹார்ட் ட்ரைவினை சோதித்து முடிவுகளைத் தரும்
புரோகிராம்கள், இணையதளங்களில் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி, சோதனை செய்து,
கிடைக்கும் அறிக்கையில் தவறு உள்ளது என முடிவு கிடைத்தால், உங்கள் ஹார்ட் ட்ரைவ்
தன் மரணத்தைச் சந்திக்க இருக்கிறது என்று பொருள். எப்படியாவது சரி செய்து, அதில்
உள்ள டேட்டாவினை மீள எடுத்துவிட்டு, ட்ரைவினை அழித்துவிடுவதே நல்லது. அதற்கு முன்,
அந்த ட்ரைவினை இன்னொரு கம்ப்யூட்டரில் இணைத்து , இயக்கிப் பார்க்கலாம். அதில்
சரியாக இயங்கினால், மீண்டும் சோதனை நடத்திப் பார்த்து முடிவெடுக்கலாம். ட்ரைவ்
சரியாக உள்ளது என சோதனை முடிவுகள் தெரிவித்தால், பிரச்னை கம்ப்யூட்டரின் பிற
பகுதிகளில் உள்ளதா எனத் தேடிப் பார்க்க வேண்டும்.
6.வைரஸ் அல்லது மால்வேர்:ஒரு வைரஸ்
அல்லது மால்வேர் எனப்படும் கம்ப்யூட்டர் இயக்கத்தினைக் கெடுக்கும் புரோகிராம்களும்,
கம்ப்யூட்டரை முடக்கிப் போடலாம். இவை ட்ரைவர் புரோகிராம்களைக் கெடுக்கலாம்; அல்லது
நீக்கலாம். முக்கியமான சிஸ்டம் பைல்களை அழிக்கலாம்; அல்லது கம்ப்யூட்டர்
இயக்கத்தினை நிர்வகிக்க நாம் அமைத்திருக்கும் செட்டிங்குகளை மாற்றலாம். இவை எல்லாமே
நாம் எதிர்பாராத நேரத்தில், கம்ப்யூட்டரை முடக்கிப் போடலாம்.
வெளிப்படையாக ஓர்
உண்மையைச் சொல்வதென்றால், ஒரு மால்வேர் புரோகிராம் இருப்பதனை அறியும் போதே, அதற்கு
எதிரான போராட்டத்தில் நாம் தோல்வி அடைந்து நிற்கிறோம். உங்கள் சிஸ்டத்தினை அது
கைப்பற்றிவிட்ட நேரத்திலிருந்து, வழக்கமாக நம் பெர்சனல் கம்ப்யூட்டரின் பிரச்னைகளை
அறிய நாம் மேற்கொள்ளும் வழிகளும் அடைப்பட்டுப்போகின்றன. எனவே, புதியதாக ஒரு ஆண்ட்டி
வைரஸ் புரோகிராம் ஒன்றினை, டவுண்லோட் செய்து அல்லது மற்றவர்களிடமிருந்து பெற்று,
இன்ஸ்டால் செய்து இயக்கி அதனை நீக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். என்ன செய்தும்
அதனை நீக்க இயலவில்லை என்றால், ட்ரைவில் உள்ள பைல்களுக்குப் பேக் அப்
எடுத்துவிட்டு, ஹார்ட் ட்ரைவினை பார்மட் செய்து, விண்டோஸ் இயக்கத்தினை மீண்டும்
பதிக்க வேண்டியதுதான். இதனால் தான், ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை, அவ்வப்போது
மேம்படுத்த வேண்டும் என்றும், சரியான பயர்வால் புரோகிராமினைப் பயன்படுத்த வேண்டும்
என்றும், நம் டேட்டா பைல்களை அவ்வப்போது பேக் அப் எடுக்க வேண்டும் எனவும் அறிவுரை
வழங்கப்படுகிறது.
7. மின்சக்தி
பிரச்னை:மேலே சொல்லப்பட்ட பிரச்னைகள் எதுவும் இல்லை என்றால்,
கம்ப்யூட்டருக்கு வழங்கப்படும் மின்சக்தி ஓட்டத்தில் பிரச்னை இருக்கலாம். போதுமான
மின்சக்தி இல்லாத நிலை, சமநிலையில் மின் ஓட்டம் கிடைக்கப்பெறாத சூழ்நிலை என
இதற்குப் பல காரணங்கள் உள்ளன. முழுமையாக நமக்கு மின்சக்தி வழங்கும் பாதையினைச்
சோதனை செய்து குறைகளை நீக்க வேண்டும்.
8.
சாப்ட்வேர் பிரச்னை:பொதுவாக சாப்ட்வேர் புரோகிராம் களால்
விண்டோஸ் முடக்கப்படும் நிகழ்வு ஏற்படாது. மிக அரிதான வேளைகளில் இது ஏற்படலாம்.
குறிப்பிட்ட சாப்ட்வேர் புரோகிராமினை இயக்கும்போது மட்டும், விண்டோஸ் இயக்கம்
நின்று போகிறது என்பதனைக் கண்டறிந்தால், அந்த சாப்ட்வேர் புரோகிராமினை நீக்கி,
மீண்டும் பதிவதன் மூலம் இதனைச் சரி செய்திடலாம்.
9. அதிக வெப்பம்:கம்ப்யூட்டரில்
அமைக்கப்பட்டிருக்கும் எலக்ட்ரானிக் உறுப்புகள் இயங்குகையில் வெப்பம் உண்டாகும்.
இதனை நீக்கிட சிறிய மின்விசிறிகள் அமைக்கப்பட்டாலும், முழுமையாக வெப்பத்திலிருந்து
எலக்ட்ரானிக் சாதனங்களைக் காப்பாற்ற இயலாது. சில வேளைகளில் இதனாலும் விண்டோஸ்
இயக்கம் முடங்கிப் போகலாம். இதனை உணரும் பட்சத்தில், கம்ப்யூட்டர் இயக்கத்தினை
நிறுத்தி, வெப்பம் முழுமையாக நீங்கிய பின்னர் இயக்கிப் பார்க்கலாம். வெப்பக் காற்று
வெளியேறும் வழிகளில் தூசு படிந்திருந்தால் நீக்கலாம். மின்விசிறிகள் முழுமையாக
இயங்குகின்றனவா எனச் சரி பார்த்து, புதியனவற்றை அமைக்கலாம். பொதுவாக விண்டோஸ்
இயக்கம் முடக்கப்பட்டவுடன், நம்மை பதற்றம் தொற்றிக் கொள்ளும், அதனை விடுத்து,
பொறுமையாகக் காரணத்தை ஆய்வு செய்தாலே, பாதி வெற்றியை நாம் அடையலாம். மேலோ சொன்ன
வழிகளில் நிச்சயம் ஒன்று காரணமாக இருக்கும். அதற்கேற்ற தீர்வினை மேற்கொள்வது
நல்லது.