கடவுள் கொடுத்த வரம்


இருக்கிறது போதுமப்பா!
 
கடவுள் சந்நிதிக்குள் நுழைந்தாலே போதும், ""ஏம்ப்பா! பக்கத்து வீட்டு பரமசிவம் கோடி கோடியா வச்சிருக்கான். நான் அவ்வளவாடா உன்கிட்டே கேட்கிறேன். ஏதோ அஞ்சு லட்சம் பத்து லட்சம் கேக்கிறேன். தரமாட்டாங்கிறியே! அவன் காரிலே போறான், எனக்கு ஒரு பைக் தரக்கூடாதா!
 
ஏ முருகா! கண்ணைத் தொறந்து பாருடா,'' என்று கதறுபவர்கள் பலர்!

ஒருத்தன் இப்படித்தான் கடவுளைப் பாடாய் படுத்தினான். ஒருநாள், கடவுளே அவன் முன்னால் வந்து விட்டார்.

""என்னப்பா வேணும்''னார்.

""வேறென்ன கேக்கப்போறேன்! ஒரு முப்பது லட்சம், தங்க நகை, வைர வைடுரியங்கள் வேணும்''னான்.

அவர் மூன்று தேங்காயைக் கொடுத்தார். ""என்ன சொல்லி உடைக்கிறாயோ, அது இதில் இருந்து வரும்,'' என்றார்.

அவன் "முப்பது லட்சம் வரட்டும்' என்று சொல்ல வாயெடுத்த வேளையில், அவன் மனைவி வந்து ""என்னங்க! டீ போடட்டுமா!'' என்றான்.

""ஆங்...முக்கியமான வேலையா இருக்கேன்லே! உன் தலையிலே இடிவிழ'' என்றான்.

திடீரென மேகக்கூட்டம்...இடி இடித்தது.

அவன் மனைவி தலையில் விழுந்து விட்டது.

""ஐயோ இறைவா! விளையாட்டா சொன்னது வினையாப் போச்சே! அவளுக்கு உயிர் பெற்று எழட்டும்,'' என்று சொல்லியபடியே இன்னொரு தேங்காயை உடைத்தான். அவள் எழுந்தாள். ஆனால், இடி விழுந்ததில் முகம் விகாரமாகி விட்டது.

""
இவளோடு எப்படி குடுத்தனம் நடத்துறது! பழைய முகம் திரும்பி வரட்டும்,'' என்றான்.
 
அவளுக்கு முந்தைய முகம் கிடைத்தது.

ஆக, முப்பது லட்சம் போச்சு! ஒருவருக்கு என்ன கிடைக்கிற வேண்டுமென இருக்கிறதோ, அதுதான் கிடைக்கும். கடவுள் கொடுத்திருக்கிற சவுகரியத்தோட வாழ கத்துக்கணும்....

கீதையும் காந்திஜியும்




காந்திஜிக்கு கீதை என்றால் உயிர்.
தினமும் அதன் ஸ்லோகங்களைப் பாராயணம் செய்து விடுவார்.

விபரமறிந்தவர்களே கீதையை படிக்க வேண்டுமானால் பகீரத பிரயத்தனம் செய்தாக வேண்டும். சாதாரணமானவர்கள் கேட்கவே வேண்டாம்....

"ஆளை விடுங்க சாமி!' என ஓடி விடுவார்கள். ஆனால், கற்றலின் கேட்டலே எளிது என்பதில் நம்பிக்கையுடைய ஒரு நண்பர், காந்திஜியைப் பார்க்க வந்தார்.

""ஜி! தாங்கள் கீதையில் பெரிய வல்லுநர். எனக்கும் அதன் சாரத்தைக் கற்றுத் தரவேண்டும்,'' என்றார்.

காந்திஜி சிரித்துக் கொண்டார்.

""சரி.. சரி... ஆஸ்ரமத்தில் சில பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. வண்டி வண்டியாகச் செங்கல் வந்து இறங்குகிறது. வண்டிக்கு எத்தனை செங்கல் வந்து இறங்குகிறது என்று குறித்து என்னிடம் தினமும் கணக்கு கொடுங்கள்,'' என்றார்.

வந்தவரும், வேலையை முடித்துக் கொடுத்தார். மறுநாளும் அதே வேலை.... இப்படியே சில நாட்கள் தொடர, வந்தவர் பொறுமை இழந்து விட்டார்.

""ஜி! நான் தங்களிடம் கீதை கேட்க வந்தால், நீங்கள் என்னைக் கூலிக்காரனைப் போல வேலை செய்யச் சொல்கிறீர்களே! எப்போது கீதை கற்றுத் தரப் போகிறீர்கள்?'' என்றார் விரக்தியுடன்.

""அது தான் கற்றுத் தந்தாகி விட்டதே'' என்றார் காந்திஜி.

""நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?'' என்ற நண்பருடன் உரையாடலைத் தொடர்ந்தார் காந்திஜி.

""இத்தனை நாள் செய்த வேலைக்கு கூலி வாங்கினீர்களா?''

""இல்லை''

""இந்த வேலையைச் செய்ததால் உங்களுக்கு ஏதாவது பலன் கிடைத்தா?

""அதுவும் இல்லை''.

பலன் கருதாமல், தன்னலமே இல்லாமல், பிறருக்காக பணி செய்வதென்பது தான் கீதையின் சாரம். இதைச் செய்தாலே கீதை படித்த மாதிரி தான்,'' என்றார் காந்திஜி.

நண்பரின் மனம் நெகிழ்ந்தது.



நம் துறைகளில் போட்டி போடாமல் வெல்வது எப்படி?


ஒரு துறையில் தோல்வியடைவது தற்கொலைக்கு உகந்த காரணமல்ல. வெற்றியடைய வேறு பல துறைகள் உள்ளன. வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்?


முதலில் ஒரு நகைச்சுவைக் கதை. ஒரு வாலிபனை மாதா கோயிலில் மணியடிக்கும் பணியில் நியமித்தார்கள். சம்பள நாள் அன்று அவனைப் பதிவேட்டில் கையொப்பமிடச் சொன்னபோது எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்றான். அவனை வேலையிலிருந்து நீக்கி விட்டார்கள். அவன் அதே ஊரில் ஒரு பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து படிப்படியாக முன்னேறிப் பெரிய பணக்காரனாகிவிட்டான். ஒரு நண்பன் அவனிடம் ""கையெழுத்துகூடப் போடத் தெரியாமலேயே நீ இவ்வளவு பெரிய வியாபாரியாகி விட்டாயே. நீ மட்டும் பள்ளிக்கூடம் சென்று படித்திருந்தால் இன்னும் பெரிய நிலையை எட்டியிருப்பாய் அல்லவா?'' என்றார். ""அப்படியெல்லாம் ஆகியிருக்காது. நான் படித்திருந்தால் இன்னமும் மாதா கோயிலில் மணியடிப்பவனாகத்தான் இருந்திருப்பேன்!'' என்றான் அந்தப் பணக்காரன்.

அடுத்து ஒரு நிஜமான வரலாறு. பீட்டர் தியல் என்பவர் ஸ்டான்போர்டு பல்கலையில் சேரத் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். அடுத்து சட்டப்பள்ளியில் தகுதித்தேர்வு எழுதிச் சேர்ந்தார். அடுத்து மாகாண நீதிமன்றப் பணியாளருக்கான தகுதித் தேர்வில் வெற்றி பெற்றார். அதன் பின் உச்ச நீதிமன்றப் பணியாளருக்கான தகுதித் தேர்வில் தோல்வியுற்றார். அத்துடன் தகுதித் தேர்வு எழுதுவதை விட்டுவிட்டு பேபால் என்ற இணைய தளத்தை நிறுவினர். அக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஃபேஸ்புக் நிறுவனத்திலும் வேறு பல தொழில்நுட்ப நிறுவனங்களிலும் பங்குகளை மலிவாக வாங்கிப் போட்டார். இன்று அவர் ஒரு கோடீஸ்வரராகிவிட்டார்.

தியல் தனது வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் தனது கருத்துகளை வலைத்தளங்களில் வெளியிடத் தொடங்கினார். அவை பெரும் வரவேற்பைப் பெற்றன. ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தின் கணினி அறிவியல் துறை அவரை ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கி மாணவர்களுக்குப் போதிக்குமாறு அழைப்பு விடுத்துக் கௌரவப் பேராசிரியர் பதவியில் நியமித்தது. உச்ச நீதிமன்றத்தில் பதவி பெறாமல் போனதால் கிடைத்த பலன் இவை.

பள்ளியில் சேருவது முதல் வர்த்தக முயற்சிகள் வரை வாழ்க்கையின் எல்லாக் கூறுகளிலும் மற்றவர்களுடன் போட்டியிட்டு முதல் வரிசையில் இடம்பிடிக்கிறவர்களே முன்னேற முடியுமென்ற எண்ணம் எல்லாரிடமும் உள்ளது. முதலாளித்துவத்தில் வெற்றி பெறப் போட்டிகள் அவசியமில்லை என்று தியல் கூறுகிறார்.

வாழ்வுப் பந்தயங்களில் போட்டி தீவிரமாகி விடும்போது கடினமான லட்சியங்களுக்கும் சிறந்த லட்சியங்களுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறோம். விசுவநாதன் ஆனந்தைப் போன்றவர்கள் செஸ் ஆட்டத்தில் வெற்றி பெற முடியாது என்ற நிலையில் சமநிலையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இழப்பைக் குறைத்து அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற முயற்சி செய்கிறார்கள். தோல்வியை விடச் சமநிலை சிறந்த லட்சியம். போட்டி கடுமையாக இருக்கும்போது போட்டியில் கலந்து கொள்ளாமலிருப்பதே நல்லது என்று தியல் கூறுகிறார். அதைவிடப் போட்டிகள் இல்லாத அல்லது குறைவாக இருக்கிற களங்களில் இறங்கிச் சிறு சிறு வெற்றிகளையும் சாதனைகளையும் எட்டுவது மேலானது. வளர்ந்து ஸ்திரப்பட்டுவிட்ட துறைகளில் பல்லாயிரம் பேருடன் போட்டியிட்டு முதலிடத்தை எட்ட முயலுவதைவிட ஒரு புதுப்புனைவான செயல்திட்டத்தை உருவாக்கி அதைச் சந்தைப்படுத்தி அதில் ஏகபோக ஆதிக்கத்தை நிறுவுவது சிறப்பு என்பது தியலின் கருத்து.

ஒரே தெருவில் ஒன்பது தையற் கடைகளிருக்கும்போது தானும் ஒரு தையற்கடையை வைக்காமல் புதுமையாகச் சிந்தனை செய்து தையற்கடைகளுக்குத் தேவையான பொருள்களையும் பழுது நீக்கும் சேவையையும் வழங்கும் கடையை வைப்பதுதான் புத்திசாலித்தனம். அதில் ஏகபோகத்தை ஏற்படுத்திவிட்டால் குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தைப் பெற முடியும். வாடிக்கையாளர்களுக்கும் நன்மைதான்.

ஏகபோகம் என்பது சட்டவிரோதச் சூழ்ச்சிகள் மூலம் போட்டியாளர்களை ஒழித்து விடுவதால் அடையப்படுவது அல்ல. சுயமுயற்சியின் மூலம் ஒரு பொருளை அல்லது சேவையை உருவாக்கி, அதைச் சந்தைப்படுத்தி, அதற்கான சந்தையை விரிவுபடுத்தித் தனித்தன்மையான அடையாளத்தையும், நிலையான இடத்தையும் உருவாக்கிக் கொள்வதே ஏகபோகம். அந்தச் சேவை அல்லது பொருள் கொஞ்ச காலத்துக்காவது தம் வசமே, தாம் மட்டுமே வழங்குவதாக இருக்கும்படி செய்வதே ஏகபோகம்.

முதலாளித்துவத்தில் போஷிக்கப்படும் போட்டி மனப்பாங்கு சில வேளைகளில் சுயமான படைப்புத் திறன்களை மழுக்கி விடுவதுண்டு எனத் தியல் எச்சரிக்கிறார். அசலான படைப்பாளிகள் கும்பல்களின் ஆதிக்கத்துக்கு ஆளாக மாட்டார்கள். மக்கள் விரும்புகிறார்கள் எனக் காரணம் காட்டி மலிவான (நாவல்கள், செய்திகள், சினிமாக்கள், இதழ்கள்) சரக்குகளைப் படைக்க மாட்டார்கள். இதுவரை முயலப்படாத, முனையப்படாத, பூர்த்தி செய்யப்படாத களங்களில் புதுப்புனைவுகளைப் படைக்க முயல்வார்கள்.

தற்காலப் போட்டிச் சூழல் படைப்பியல் திறன்களை மழுங்கடிப்பது மட்டுமன்றி தோல்விகள் இளைய தலைமுறையினரிடம் தற்கொலைக்குக்கூடத் தூண்டிவிடும் அளவுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

ஒரு மாணவன் போட்டித் தேர்வில் முதலிடம் பெறும் முயற்சியில் எல்லாப் பாடங்களிலிருந்தும் சில குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே படிக்கிறான். நேரப் பங்கீடு செய்து கொண்டு கேள்வி வங்கிகளிலிருந்தும், துணை நூல்களிலிருந்தும் பூவா, தலையா போட்டுப் பார்த்துக் கேள்விகளைத் தேர்ந்தெடுத்துப் படித்து மதிப்பெண் போட்டியில் இறங்குகிறான். அடுத்து எந்தக் கல்லூரியில் எந்தப் படிப்பைப் படித்தால் எந்த வெளிநாட்டு நிறுவனத்தில் எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று அலசி ஆராய்ந்து வரிசையாகத் தகுதித் தேர்வுகளில் பங்கு பெறுகிறான். அறிவைவிட வெற்றியே முக்கியமானதாகிறது. பிறர் வற்புறுத்தலின் பேரில் விருப்பமில்லாத துறையில் கல்வி பெற்றுத் திசை மாறுகிறவர்களும் உண்டு. மருத்துவப் பட்டம் பெற்றவர் காவல் துறை அதிகாரியாகவும் பொறியியல் படித்தவர் வங்கி மேலாளராகவும் பணியாற்றுவதைக் காண முடிகிறது. அங்கும்கூடப் போட்டித் தேர்வுப் பித்து அவர்களை விடுவதில்லை. மேலும் மேலும் பதவி உயர்வுக்கான தகுதித் தேர்வுகளை அவர்கள் எழுதிக் கொண்டேயிருப்பார்கள். இறுதியில் அது மட்டுமே அவர்களுடைய வாழ்க்கையின் ஒற்றை லட்சியமாகிவிடும். மற்ற அக்கறைகளும் படைப்புத்திறன்களும் கைவிடப்பட்டு விடுகின்றன.

அரசியலில் இது அன்றாட நிகழ்வு. வறுமையை ஒழிப்போம், சமூகத்தைச் சீர்திருத்துவோம் என்றெல்லாம் முழங்கி வந்தவர்கள் தனக்கு மேலுள்ளவர்களைக் கீழே வீழ்த்திவிட்டுத் தலைவர் பதவியில் அமர்வதிலும், போட்டியாளர்களை ஒழித்துப் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதிலும் முனைந்து விடுகிறார்கள். ஊடகங்களில் தம்மைப் பற்றிய செய்திகளை அதிகமாக வரச் செய்வதும், மற்றவர் பற்றிய செய்திகளை இருட்டடிப்புச் செய்வதுமே அவர்களுடைய முழு நேர வேலையாகி விடுகிறது. ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு கிட்டிவிட்டால் புதிய, புதுமையான வளர்ச்சித் திட்டங்கள் அல்லது மக்கள் நலத் திட்டங்களைப் புறக்கணித்து, முந்தைய ஆட்சியைவிட அதிகமான இலவசங்கள், அதிகமான சலுகைகள், அதிகமான மானியங்கள் என்பதே அவர்களுடைய கொள்கை அறிவிப்புகளாக இருக்கும். பதிலுக்குப் பதில், சவாலுக்குச் சவால் ஏட்டிக்குப் போட்டி ஆகியவையே அவர்களுடைய உத்திகள். ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றால்கூடப் போதும் என்ற அளவுக்குப் போட்டி வெறி மிஞ்சி விடுகிறது. இந்த வெறியால் பீடிக்கப்பட்டவர்கள் சாதாரணமாகவே போர், போர் முரசு, போர்க்களம், மாவீரன், தளபதி, பாசறை, வீர மரணம், ஈட்டி, கூர்வாள், துப்பாக்கி, பீரங்கி போன்ற பயங்கரமான உபமானங்களையும் குறியீடுகளையும் பயன்படுத்தியே பேசி முழங்குவார்கள். ஏனெனில், போர் என்பது போட்டியின் உச்சநிலைக் குறியீடு. வென்றால் மகுடம், வீழ்ந்தால் மரணம் என்ற தீவிரமான விளிம்புகளைக் கொண்டது.

வாழ்க்கையின் எல்லாக் கூறுகளிலும் தீவிரமாகப் போட்டியிட்டால்தான் வெல்ல முடியும் என்பது உண்மையல்ல. அரசியலில்கூடத் தலைவரை விட, இரண்டாம் இடத்திலுள்ள முக்கியஸ்தர்கள் அதிகச் செல்வமும் செல்வாக்கும் பெற்றுத் தலைவர் படுகிற அவஸ்தைகளும் அச்சங்களும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். பிற துறைகளில் ஈடுபட்டுக் கல்வி வள்ளல்களாகவும், தொழிலதிபர்களாகவும் செழிக்கிறார்கள். முதல் இடம் தேவையற்ற கவனங்களைத் தம் பால் ஈர்க்கும் என்பதை உணர்ந்துகொண்டு வெற்றி பெறும் புத்திசாலிகள் இவர்கள்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, சுறுசுறுப்பு, ஊக்கம், நேர்மை, நாணயம் ஆகியவை வாழ்க்கையின் போட்டித் திறன்கள். தமக்கே உரித்தானதொரு ஏகபோகச் சாதனையை நிகழ்த்தச் சுதந்திரமான சிந்தனையும், விழிப்புணர்வும் மறக்கப்பட்ட மரபுகளை மீட்டெடுக்கும் திறனும் தேவை.

பாக்கு முதல் ஷாம்பு வரையானவற்றைச் சிறு பைகளில் விற்கிறவர்கள், தமிழகத்திற்கு பீட்சா, நூடுல்ஸ் போன்ற புதிய உணவுகளை அறிமுகப்படுத்தியவர்கள், முதல் வகுப்பு ரயில் கட்டணத்தில் விமானப் பயணத்தைச் சாத்தியமாக்கியவர்கள் போன்றவர்கள் இதற்கு முன்னுதாரணங்கள். இவர்கள் யாருடனும் போட்டியிடவில்லை என்பதைக் கவனிக்கவும்.

அமெரிக்கா இன்னமும் முதலிடப் பொருளாதார வல்லரசாக இருப்பதற்கு அங்கு தினமும் புதுப்புனைவுகள் தொடர்ந்து உருவாக்கப்படுவதும், பல பொருள்களையும் சேவைகளையும் அது மட்டுமே வழங்கக்கூடியதாக இருப்பதுமே காரணம். ஒன்றில் தோற்றாலும் வேறு துறைக்கு மாறி வெற்றி பெறும் வாய்ப்புகள் உண்டு.

பள்ளிப்படிப்பு முடிக்காமல் ஓடிவந்தவர்கள் திரைப்படத் துறையில் பெரும் சாதனை படைத்திருக்கிறார்கள். அவர்களில் பலர் வசூலிலோ, அதிக நாள்கள் ஓடியதிலோ முதல் இடத்தைப் பிடிக்கும் வெறியின்றிக் கணிசமான லாபமும், நல்ல பெயரும் பெற்றுத் தருகிற படங்களை எடுத்துத் திருப்தியடைகிறார்கள். போட்டியிட்டு வெல்வதைவிடப் போட்டியில்லாத துறைகளில் ஈடுபட்டு வெல்வது மேல்.

தேர்வு முடிவுகள் வர இருக்கும் வேளையில், மாணவர்கள், எல்லோரும் விரும்பும் துறைகளில் சேர்ந்து படிக்க விரும்பாமல், தாங்கள் விரும்பும் துறை எதுவோ அதை விரும்பித் தேர்ந்தெடுத்துப் படித்து வெல்வதுதான் புத்திசாலித்தனம் என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு துறையில் தோல்வியடைவது தற்கொலைக்கு உகந்த காரணமல்ல. வெற்றியடைய வேறு பல துறைகள் உள்ளன. வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்?
நன்றி:தினமணி

கோடையின் கொடுமையிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்.

















கோடையில் தவிர்க்க வேண்டியவை 

அதிக வியர்வை இருக்கும்போதும், வெயிலில் இருந்து திரும்பிய உடனும் குளிக்கக்கூடாது. 
மதிய வெயிலில் அலைவதைத் தவிர்க்கவேண்டும். முடிந்தவரை பகலில் நீண்ட தூரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. 
கோடை வெப்பத்தின் போது அதிக நேரம் குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். அதுபோல் அலைந்து திரிந்து 
வியர்வையுடன் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குச் செல்வதும் நல்லதல்ல. 
சர்க்கரை நோயாளிகள் கோடைக் காலத்தில் அதிகம் வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். 
கறுப்பு வண்ணம் சூரிய ஒளியை உள்வாங்கும் எனவே வெளியே செல்லும்போது கருப்பு வண்ண குடைகளை எடுத்துச்செல்லாதீர்கள். 
வெயிலில் அலைந்து வந்தவுடன் நீர் அருந்தக் கூடாது. 
குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்த நீரைத் தவிர்த்திடுங்கள். குளிர்ந்த நீர் ஜலதோஷம், தலைவலி, உடல்வலியை ஏற்படுத்தும். மண்பானையில் வைத்த நீரை அருந்துவது நல்லது. 
கோடைக் காலத்தில் டிபன் அதாவது தோசை, பூரி, புரோட்டா இவற்றை தவிர்ப்பது நல்லது. 
வாயுவைத் தூண்டும் உணவுகளை தவிர்த்தல் நலம். 

கோடையில் செய்ய வேண்டியவை 























உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணியவேண்டும். 
அதிக நீர்ச்சத்துள்ள ஆரஞ்சு, சாத்துகுடி, தர்பூசணி போன்ற பழங்களை சாப்பிட வேண்டும். 
இளநீர், பனை நுங்கு, பதநீர் சாப்பிடலாம். இவை உடல் வெப்பத்தைத் தடுத்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். 
வெயிலின் தாக்கத்தால் உடலிலிருந்து அதிகளவு வியர்வை வெளியேறும். இதனால் உடலின் நீர்ச்சத்து குறைந்துவிடும் 
எனவே அதிக நீர் அருந்த வேண்டும். இடைவெளி விட்டு நீர் அருந்துவது நல்லது. 
காலையில் இட்லி, ஓட்ஸ் அல்லது கேழ்வரகு, கம்பு இவற்றை கஞ்சியாக செய்து சாப்பிடலாம். 
மதிய உணவில் அதிக காரம், புளி சேர்க்காமல் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. பரங்கிக்காய், பூசனிக்காய், சுரக்காய், வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
இரவு உணவு மென்மையாக இருக்க வேண்டும். எளிதில் சீரணமடையும் உணவுகளை உண்பது நல்லது. 
தினமும் இருமுறை குளிப்பது நல்லது. 
வெயில் தாக்காமலிருக்க தலையில் தொப்பி வைத்துக்கொள்ளலாம். 
தலை அதிகம் வேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 
வெளியில் செல்லும்போது முகம், கை, கால்களில் லேசாக எண்ணெய் தேய்த்துக்கொள்ளலாம். இதனால் சருமம் வறட்சியடையாமல் இருக்கும். 
வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. 
சர்க்கரை நோயாளிகள் கை கால்களுக்கு எண்ணெய் தடவவேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 
படுக்கையறை நன்கு காற்றோட்டமானதாக இருக்க வேண்டும். பருத்தியினால் தயாரிக்கப்பட்ட விரிப்புகளை பயன்படுத்துவது நல்லது. 
வெளியே செல்லும்போது வெண்மை நிற குடைகளை பயன்டுத்துவது நல்லது. வெண்ணிற குடைகள் சூரிய வெப்பத்தை உள்வாங்காது. 

யு.எஸ்.பி. டிரைவ் கரப்ட் ஆனால்...



யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ்கள் அனைத்தும் “plug and play” வகையைச் சேர்ந்த சாதனங்கள். இவை நாம் பயன்படுத்தும் பலவகையான, வீடியோ பைல் உட்பட, பைல்களை சேவ் செய்து, மீண்டும் பெற்றுப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டவை. பொதுவாக இந்த வேலையில் இவை எந்த பிரச்னையையும் தருவதில்லை.

ஆனால், கம்ப்யூட்டரில் உள்ள, இதனை இணைக்கும் யு.எஸ்.பி. போர்ட்டிலிருந்து சரியாக இதனை நீக்கவில்லை என்றால், பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக, கம்ப்யூட்டர் அதனைத் தேடி, செயல்பாட்டில் வைத்திருக்கையில், கம்ப்யூட்டரிலிருந்து நீக்கினால் நிச்சயம் பிரச்னைகள் வர வாய்ப்புண்டு.

சில வேளைகளில், அதில் உள்ள அனைத்து டேட்டாவினையும் மீண்டும் பெற்று பயன்படுத்த முடியாமல் போய்விடும். அல்லது குறிப்பிட்ட பைல் கரப்ட் ஆகும். அல்லது பிளாஷ் ட்ரைவே பயன்படுத்த முடியாமல் போய்விடலாம்.


பெரும்பாலும், இது போன்ற சிக்கல்களைச் சந்திக்கும் பிளாஷ் ட்ரைவ்களை, அவற்றை மீண்டும் பார்மட் செய்வதன் மூலம், தொடர்ந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம். ஆனால், இந்த வழியை மேற்கொண்டால், உங்கள் பிளாஷ் ட்ரைவில் உள்ள அனைத்து பைல்களும் அழிக்கப்படும்.

இந்த வேலையை மேற்கொள்ளும் முன்னர், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள யு.எஸ்.பி. போர்ட் செயல்பாட்டில் சிக்கல் இருக்கிறதா எனக் கண்காணிக்கவும். இதற்கு கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து யு.எஸ்.பி. போர்ட்களையும் அன் இன்ஸ்டால் மற்றும் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இதனை விண்டோஸ் டிவைஸ் மேனேஜர் மூலம் மேற்கொள்ளலாம்.

யு.எஸ்.பி. ட்ரைவை எடுத்துவிடவும். பின்னர், கம்ப்யூட்டரில் உள்ள ஸ்டார்ட் மெனு சென்று, அதன் சர்ச் பாக்ஸில் “Device Manager” என டைப் செய்திடவும். அல்லது கண்ட்ரோல் பேனல் என டைப் செய்து கிடைக்கும் பிரிவில் டிவைஸ் மேனேஜரைப் பெறவும். இதற்கு கண்ட்ரோல் பேனல் பிரிவில் “Hardware and Sound,” என்பதில் கிளிக் செய்திடவும்.

இங்கு கிடைக்கும் “Device Manager” என்ற லிங்க்கில் மீண்டும் கிளிக் செய்திடவும். உங்களுடைய யு.எஸ்.பி.போர்ட்களைக் கண்டறிய “Universal Serial Bus” என்று இருப்பதை மவுஸ் கிளிக் மூலம் விரிக்கவும். இதில் கிடைக்கும் பல வரிகளில், முதலாவதாக உள்ளதைத் தேர்ந்தெடுத்து, ரைட் கிளிக் செய்திடவும்.

கிடைக்கும் மெனுவில் “Uninstall” என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். பின்னர், ஓகே கிளிக் செய்திடவும். இப்படியே மற்ற யு.எஸ்.பி. சார்ந்த வரிகளிலும் இச்செயலை மேற்கொள்ளவும். இப்போது கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து யு.எஸ்.பி.போர்ட்களும் அன் இன்ஸ்டால் ஆகி இருக்கும்.

இவை அனைத்தையும் மீண்டும் தானாக ரீ இன்ஸ்டால் ஆக, மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர, டிவைஸ் மேனேஜர் மேலாக உள்ள, “Scan For Hardware Changes.” என்ற பெயரில் உள்ள புளூ கலர் ஐகானில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவினை, ஏதேனும் ஒரு யு.எஸ்.பி. ட்ரைவில் இணைத்துச் செயல் படுத்திப் பார்க்கவும்.

இன்னும் தொடர்ந்து உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவ் செயல்படவில்லை என்றால், ட்ரைவினை பார்மட் செய்வதுதான் அடுத்த வழி. ஸ்டார்ட் மெனுவில் “Computer” என்ற பட்டனை அழுத்தவும். “Devices With Removable Storage” என்ற தலைப்பின் கீழாக, உங்கள் ட்ரைவின் பெயரைத் தேடிக் கண்டறியவும்.

இதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “Format” என்பதைத் தேர்ந்தெடுத்து செயல்படுத்தவும். பார்மட் செய்து முடித்த பின்னர், ரைட் கிளிக் செய்து “Eject” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து வெளியேறவும்.

“Format Options” என்ற பிரிவில் என்ற “Quick Format” பாக்ஸின் முன் டிக் அடையாளம் இருந்தால், அதனை எடுத்துவிடவும். இந்த வகை பார்மட்டில், யு.எஸ்.பி. ட்ரைவ் மிக வேகமாக பார்மட் செய்யப்பட்டாலும், கரப்ட் ஆன ட்ரைவினை இந்த வகையில் சீராக பார்மட் செய்திட முடியுமா என்பது சந்தேகமே. வழக்கமான முறையில் ட்ரைவினை பார்மட் செய்த பின்னர், ட்ரைவினை போர்ட்டி லிருந்து எடுத்து விடவும்.

விண்டோஸ் 7 சிஸ்டம், பாதுகாப்பாக ட்ரைவினை போர்ட்டிலிருந்து நீக்க வசதியைக் கொண்டுள்ளது.இதன் மூலம் ட்ரைவில் பதிந்துள்ள டேட்டா அழிக்கப்படுவதும், ட்ரைவ் கரப்ட் ஆவதும் தடுக்கப்படுகிறது. இதற்கு ட்ரைவ் போர்ட்டில் இணைக்கப்பட்டிருக்கையில், டாஸ்க் பாரில் உள்ள “Safely Remove Hardware and Eject Media” என்ற ஐகானில் கிளிக் செய்திடவும். இந்த ஐகான், டாஸ்க் பாரில் வலது கீழாக இருக்கும்.

இதில் தரப்பட்டுள்ள “Eject” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்தால், கம்ப்யூட்டருக்கும் ட்ரைவிற்கும் உள்ள இணைப்பு நிறுத்தப்படும். டேட்டா பரிமாறிக் கொள்ளும் செயல் நடைபெறாது. இதனை உறுதிப்படுத்திக் கொண்டு, பொறுமையாக ட்ரைவினை நீக்கவும்.



பேஸ்புக்கில் அடுத்தடுத்து சில்மிஷங்கள்



ஆர்வத்தினைத் தூண்டும் வகையில் தகவல்களை வெளியிட்டு, அதன் மூலம் மக்களை சிக்கவைத்து, அவர்களின் தனி நபர் தகவல்களைப் பெறும் முயற்சி இப்போது சமூக இணைய தளமான பேஸ்புக் பெயரில் நடைபெறுகிறது.

இதனை சர்வே ஸ்கேம் (Survey Scam) என அழைக்கின்றனர். “இந்த பெண் கடற்கரையில் ஆயிரம் பேருக்கு முன்னால் என்ன செய்கிறாள் என்று பாருங்கள்’ என ஒரு செய்தி தரப்பட்டு ஒரு லிங்க் தரப்படுகிறது.

இதில் கிளிக் செய்தால், பேஸ்புக் போலவே வடிவமைக்கப்பட்ட ஒரு தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். இதன் முகவரியை உற்றுக் கவனித்தால் மட்டுமே அது போலியானது எனத் தெரியவரும்.

இங்கு ஒரு வீடியோவிற்கான இணைப்பு இருக்கும். வீடியோ பிளேயர் காட்டப்படும். உடனே அது படிப்படியாக மறைக்கப்பட்டு, இந்த வீடியோவினைப் பார்ப்பதற்கு உங்களுக்கு உரிய வயது ஆகிவிட்டதா என்ற கேள்வி கேட்கப்பட்டு, உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி எல்லாம் கேட்டு வாங்கப்படும்.

இதன் பின்னர், வேறு எதுவும் காட்டப்படாமல் தளம் நின்றுவிடும். நீங்கள் அளித்துள்ள தகவல்கள் மற்றவருக்கு விற்பனை செய்யப்படும். அவர்கள் இதனை தவறாகப் பயன்படுத்தும் வாப்புகள் ஏற்படும்.

மேலே தரப்பட்டுள்ளது போல பலவகையான செய்திகள் ஸ்கேம் ஆகப் பரவத் தொடங்கி உள்ளன. இது போன்ற ஆர்வமூட்டும் தகவல்களைக் கண்டால் சற்று எச்சரிக்கையுடன் விலகுவது நல்லது.