ஒரு துறையில் தோல்வியடைவது தற்கொலைக்கு உகந்த காரணமல்ல. வெற்றியடைய வேறு பல துறைகள் உள்ளன. வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்?
முதலில் ஒரு நகைச்சுவைக் கதை. ஒரு வாலிபனை மாதா
கோயிலில் மணியடிக்கும் பணியில் நியமித்தார்கள். சம்பள நாள் அன்று அவனைப்
பதிவேட்டில் கையொப்பமிடச் சொன்னபோது எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்றான். அவனை
வேலையிலிருந்து நீக்கி விட்டார்கள். அவன் அதே ஊரில் ஒரு பெட்டிக்கடை வைத்து
வியாபாரம் செய்து படிப்படியாக முன்னேறிப் பெரிய பணக்காரனாகிவிட்டான். ஒரு நண்பன்
அவனிடம் ""கையெழுத்துகூடப் போடத் தெரியாமலேயே நீ இவ்வளவு பெரிய வியாபாரியாகி
விட்டாயே. நீ மட்டும் பள்ளிக்கூடம் சென்று படித்திருந்தால் இன்னும் பெரிய நிலையை
எட்டியிருப்பாய் அல்லவா?'' என்றார். ""அப்படியெல்லாம் ஆகியிருக்காது. நான்
படித்திருந்தால் இன்னமும் மாதா கோயிலில் மணியடிப்பவனாகத்தான் இருந்திருப்பேன்!''
என்றான் அந்தப் பணக்காரன்.
அடுத்து ஒரு நிஜமான வரலாறு. பீட்டர் தியல் என்பவர் ஸ்டான்போர்டு பல்கலையில் சேரத் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். அடுத்து சட்டப்பள்ளியில் தகுதித்தேர்வு எழுதிச் சேர்ந்தார். அடுத்து மாகாண நீதிமன்றப் பணியாளருக்கான தகுதித் தேர்வில் வெற்றி பெற்றார். அதன் பின் உச்ச நீதிமன்றப் பணியாளருக்கான தகுதித் தேர்வில் தோல்வியுற்றார். அத்துடன் தகுதித் தேர்வு எழுதுவதை விட்டுவிட்டு பேபால் என்ற இணைய தளத்தை நிறுவினர். அக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஃபேஸ்புக் நிறுவனத்திலும் வேறு பல தொழில்நுட்ப நிறுவனங்களிலும் பங்குகளை மலிவாக வாங்கிப் போட்டார். இன்று அவர் ஒரு கோடீஸ்வரராகிவிட்டார்.
தியல் தனது வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் தனது கருத்துகளை வலைத்தளங்களில் வெளியிடத் தொடங்கினார். அவை பெரும் வரவேற்பைப் பெற்றன. ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தின் கணினி அறிவியல் துறை அவரை ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கி மாணவர்களுக்குப் போதிக்குமாறு அழைப்பு விடுத்துக் கௌரவப் பேராசிரியர் பதவியில் நியமித்தது. உச்ச நீதிமன்றத்தில் பதவி பெறாமல் போனதால் கிடைத்த பலன் இவை.
பள்ளியில் சேருவது முதல் வர்த்தக முயற்சிகள் வரை வாழ்க்கையின் எல்லாக் கூறுகளிலும் மற்றவர்களுடன் போட்டியிட்டு முதல் வரிசையில் இடம்பிடிக்கிறவர்களே முன்னேற முடியுமென்ற எண்ணம் எல்லாரிடமும் உள்ளது. முதலாளித்துவத்தில் வெற்றி பெறப் போட்டிகள் அவசியமில்லை என்று தியல் கூறுகிறார்.
வாழ்வுப் பந்தயங்களில் போட்டி தீவிரமாகி விடும்போது கடினமான லட்சியங்களுக்கும் சிறந்த லட்சியங்களுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறோம். விசுவநாதன் ஆனந்தைப் போன்றவர்கள் செஸ் ஆட்டத்தில் வெற்றி பெற முடியாது என்ற நிலையில் சமநிலையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இழப்பைக் குறைத்து அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற முயற்சி செய்கிறார்கள். தோல்வியை விடச் சமநிலை சிறந்த லட்சியம். போட்டி கடுமையாக இருக்கும்போது போட்டியில் கலந்து கொள்ளாமலிருப்பதே நல்லது என்று தியல் கூறுகிறார். அதைவிடப் போட்டிகள் இல்லாத அல்லது குறைவாக இருக்கிற களங்களில் இறங்கிச் சிறு சிறு வெற்றிகளையும் சாதனைகளையும் எட்டுவது மேலானது. வளர்ந்து ஸ்திரப்பட்டுவிட்ட துறைகளில் பல்லாயிரம் பேருடன் போட்டியிட்டு முதலிடத்தை எட்ட முயலுவதைவிட ஒரு புதுப்புனைவான செயல்திட்டத்தை உருவாக்கி அதைச் சந்தைப்படுத்தி அதில் ஏகபோக ஆதிக்கத்தை நிறுவுவது சிறப்பு என்பது தியலின் கருத்து.
ஒரே தெருவில் ஒன்பது தையற் கடைகளிருக்கும்போது தானும் ஒரு தையற்கடையை வைக்காமல் புதுமையாகச் சிந்தனை செய்து தையற்கடைகளுக்குத் தேவையான பொருள்களையும் பழுது நீக்கும் சேவையையும் வழங்கும் கடையை வைப்பதுதான் புத்திசாலித்தனம். அதில் ஏகபோகத்தை ஏற்படுத்திவிட்டால் குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தைப் பெற முடியும். வாடிக்கையாளர்களுக்கும் நன்மைதான்.
ஏகபோகம் என்பது சட்டவிரோதச் சூழ்ச்சிகள் மூலம் போட்டியாளர்களை ஒழித்து விடுவதால் அடையப்படுவது அல்ல. சுயமுயற்சியின் மூலம் ஒரு பொருளை அல்லது சேவையை உருவாக்கி, அதைச் சந்தைப்படுத்தி, அதற்கான சந்தையை விரிவுபடுத்தித் தனித்தன்மையான அடையாளத்தையும், நிலையான இடத்தையும் உருவாக்கிக் கொள்வதே ஏகபோகம். அந்தச் சேவை அல்லது பொருள் கொஞ்ச காலத்துக்காவது தம் வசமே, தாம் மட்டுமே வழங்குவதாக இருக்கும்படி செய்வதே ஏகபோகம்.
முதலாளித்துவத்தில் போஷிக்கப்படும் போட்டி மனப்பாங்கு சில வேளைகளில் சுயமான படைப்புத் திறன்களை மழுக்கி விடுவதுண்டு எனத் தியல் எச்சரிக்கிறார். அசலான படைப்பாளிகள் கும்பல்களின் ஆதிக்கத்துக்கு ஆளாக மாட்டார்கள். மக்கள் விரும்புகிறார்கள் எனக் காரணம் காட்டி மலிவான (நாவல்கள், செய்திகள், சினிமாக்கள், இதழ்கள்) சரக்குகளைப் படைக்க மாட்டார்கள். இதுவரை முயலப்படாத, முனையப்படாத, பூர்த்தி செய்யப்படாத களங்களில் புதுப்புனைவுகளைப் படைக்க முயல்வார்கள்.
தற்காலப் போட்டிச் சூழல் படைப்பியல் திறன்களை மழுங்கடிப்பது மட்டுமன்றி தோல்விகள் இளைய தலைமுறையினரிடம் தற்கொலைக்குக்கூடத் தூண்டிவிடும் அளவுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
ஒரு மாணவன் போட்டித் தேர்வில் முதலிடம் பெறும் முயற்சியில் எல்லாப் பாடங்களிலிருந்தும் சில குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே படிக்கிறான். நேரப் பங்கீடு செய்து கொண்டு கேள்வி வங்கிகளிலிருந்தும், துணை நூல்களிலிருந்தும் பூவா, தலையா போட்டுப் பார்த்துக் கேள்விகளைத் தேர்ந்தெடுத்துப் படித்து மதிப்பெண் போட்டியில் இறங்குகிறான். அடுத்து எந்தக் கல்லூரியில் எந்தப் படிப்பைப் படித்தால் எந்த வெளிநாட்டு நிறுவனத்தில் எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று அலசி ஆராய்ந்து வரிசையாகத் தகுதித் தேர்வுகளில் பங்கு பெறுகிறான். அறிவைவிட வெற்றியே முக்கியமானதாகிறது. பிறர் வற்புறுத்தலின் பேரில் விருப்பமில்லாத துறையில் கல்வி பெற்றுத் திசை மாறுகிறவர்களும் உண்டு. மருத்துவப் பட்டம் பெற்றவர் காவல் துறை அதிகாரியாகவும் பொறியியல் படித்தவர் வங்கி மேலாளராகவும் பணியாற்றுவதைக் காண முடிகிறது. அங்கும்கூடப் போட்டித் தேர்வுப் பித்து அவர்களை விடுவதில்லை. மேலும் மேலும் பதவி உயர்வுக்கான தகுதித் தேர்வுகளை அவர்கள் எழுதிக் கொண்டேயிருப்பார்கள். இறுதியில் அது மட்டுமே அவர்களுடைய வாழ்க்கையின் ஒற்றை லட்சியமாகிவிடும். மற்ற அக்கறைகளும் படைப்புத்திறன்களும் கைவிடப்பட்டு விடுகின்றன.
அரசியலில் இது அன்றாட நிகழ்வு. வறுமையை ஒழிப்போம், சமூகத்தைச் சீர்திருத்துவோம் என்றெல்லாம் முழங்கி வந்தவர்கள் தனக்கு மேலுள்ளவர்களைக் கீழே வீழ்த்திவிட்டுத் தலைவர் பதவியில் அமர்வதிலும், போட்டியாளர்களை ஒழித்துப் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதிலும் முனைந்து விடுகிறார்கள். ஊடகங்களில் தம்மைப் பற்றிய செய்திகளை அதிகமாக வரச் செய்வதும், மற்றவர் பற்றிய செய்திகளை இருட்டடிப்புச் செய்வதுமே அவர்களுடைய முழு நேர வேலையாகி விடுகிறது. ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு கிட்டிவிட்டால் புதிய, புதுமையான வளர்ச்சித் திட்டங்கள் அல்லது மக்கள் நலத் திட்டங்களைப் புறக்கணித்து, முந்தைய ஆட்சியைவிட அதிகமான இலவசங்கள், அதிகமான சலுகைகள், அதிகமான மானியங்கள் என்பதே அவர்களுடைய கொள்கை அறிவிப்புகளாக இருக்கும். பதிலுக்குப் பதில், சவாலுக்குச் சவால் ஏட்டிக்குப் போட்டி ஆகியவையே அவர்களுடைய உத்திகள். ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றால்கூடப் போதும் என்ற அளவுக்குப் போட்டி வெறி மிஞ்சி விடுகிறது. இந்த வெறியால் பீடிக்கப்பட்டவர்கள் சாதாரணமாகவே போர், போர் முரசு, போர்க்களம், மாவீரன், தளபதி, பாசறை, வீர மரணம், ஈட்டி, கூர்வாள், துப்பாக்கி, பீரங்கி போன்ற பயங்கரமான உபமானங்களையும் குறியீடுகளையும் பயன்படுத்தியே பேசி முழங்குவார்கள். ஏனெனில், போர் என்பது போட்டியின் உச்சநிலைக் குறியீடு. வென்றால் மகுடம், வீழ்ந்தால் மரணம் என்ற தீவிரமான விளிம்புகளைக் கொண்டது.
வாழ்க்கையின் எல்லாக் கூறுகளிலும் தீவிரமாகப் போட்டியிட்டால்தான் வெல்ல முடியும் என்பது உண்மையல்ல. அரசியலில்கூடத் தலைவரை விட, இரண்டாம் இடத்திலுள்ள முக்கியஸ்தர்கள் அதிகச் செல்வமும் செல்வாக்கும் பெற்றுத் தலைவர் படுகிற அவஸ்தைகளும் அச்சங்களும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். பிற துறைகளில் ஈடுபட்டுக் கல்வி வள்ளல்களாகவும், தொழிலதிபர்களாகவும் செழிக்கிறார்கள். முதல் இடம் தேவையற்ற கவனங்களைத் தம் பால் ஈர்க்கும் என்பதை உணர்ந்துகொண்டு வெற்றி பெறும் புத்திசாலிகள் இவர்கள்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, சுறுசுறுப்பு, ஊக்கம், நேர்மை, நாணயம் ஆகியவை வாழ்க்கையின் போட்டித் திறன்கள். தமக்கே உரித்தானதொரு ஏகபோகச் சாதனையை நிகழ்த்தச் சுதந்திரமான சிந்தனையும், விழிப்புணர்வும் மறக்கப்பட்ட மரபுகளை மீட்டெடுக்கும் திறனும் தேவை.
பாக்கு முதல் ஷாம்பு வரையானவற்றைச் சிறு பைகளில் விற்கிறவர்கள், தமிழகத்திற்கு பீட்சா, நூடுல்ஸ் போன்ற புதிய உணவுகளை அறிமுகப்படுத்தியவர்கள், முதல் வகுப்பு ரயில் கட்டணத்தில் விமானப் பயணத்தைச் சாத்தியமாக்கியவர்கள் போன்றவர்கள் இதற்கு முன்னுதாரணங்கள். இவர்கள் யாருடனும் போட்டியிடவில்லை என்பதைக் கவனிக்கவும்.
அமெரிக்கா இன்னமும் முதலிடப் பொருளாதார வல்லரசாக இருப்பதற்கு அங்கு தினமும் புதுப்புனைவுகள் தொடர்ந்து உருவாக்கப்படுவதும், பல பொருள்களையும் சேவைகளையும் அது மட்டுமே வழங்கக்கூடியதாக இருப்பதுமே காரணம். ஒன்றில் தோற்றாலும் வேறு துறைக்கு மாறி வெற்றி பெறும் வாய்ப்புகள் உண்டு.
பள்ளிப்படிப்பு முடிக்காமல் ஓடிவந்தவர்கள் திரைப்படத் துறையில் பெரும் சாதனை படைத்திருக்கிறார்கள். அவர்களில் பலர் வசூலிலோ, அதிக நாள்கள் ஓடியதிலோ முதல் இடத்தைப் பிடிக்கும் வெறியின்றிக் கணிசமான லாபமும், நல்ல பெயரும் பெற்றுத் தருகிற படங்களை எடுத்துத் திருப்தியடைகிறார்கள். போட்டியிட்டு வெல்வதைவிடப் போட்டியில்லாத துறைகளில் ஈடுபட்டு வெல்வது மேல்.
தேர்வு முடிவுகள் வர இருக்கும் வேளையில், மாணவர்கள், எல்லோரும் விரும்பும் துறைகளில் சேர்ந்து படிக்க விரும்பாமல், தாங்கள் விரும்பும் துறை எதுவோ அதை விரும்பித் தேர்ந்தெடுத்துப் படித்து வெல்வதுதான் புத்திசாலித்தனம் என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ள வேண்டும்.

நன்றி:தினமணி