மின் தட்டுப்பாடு




பள்ளிக் குழந்தைகள்

பாடம் படித்துக் கொள்ளட்டும்

சூரியனே..

உன் மாலைப் பொழுதை

சற்று நீட்டித்துக் கொள் !

வீட்டு பட்ஜெட்டில்

மெழுகு வர்த்தியின்

எண்ணிக்கையாவது

சற்றுக் குறையட்டும்

மின்மினிப் பூச்சிகளே

எங்கள் வீட்டிற்குள்

வந்து விளையாடுங்கள் !

எரியாத தெருவிளக்கின் அடியில்

எப்படி பூ விற்பாள்

எங்கள் ஊர் பூக்காரி ?

நிலாவே

அமாவாசையன்றும் கூட

சிறிது நேரம் வந்துவிட்டு போ !

எரியும் அடுப்பின் வெளிச்சத்தில்

எப்படி எங்களால்

ஒரு ருபாய் அரிசியில்

கல் பொறுக்க முடியும் ?

பூமிக் கூரையிலிருக்கும்

விண்மீனே .. எங்கள்

கூரை வீட்டுக்குள்ளும் வருவாயா?


இருக்கிறது என்பதற்காக

இருளைப் பகலாக்கி

விளையாட்டுப் போட்டி கண்டோம் !

குளிர் காலத்தில் கூட

குளிர் அறை கேட்டோம் !

முழத்துக்கொரு விளக்கு வைத்து

பொதுக்கூட்டம் போட்டோம் !

கொசு மட்டுமே நடமாடும்

நடு இரவில் கூட

விளக்கு வைத்து

விளம்பரப் பலகையை

மினுங்க வைத்தோம் !

அலங்கார விளக்குகள் நடுவே

அமைச்சரை அழைத்து வந்தோம் !

இருந்தது தீர்ந்ததால்

இருளாகிப் போனது இப்போது !


\இயற்கையே ...

இருளைப் போக்க

நீ

வருவது எப்போது ?